வணக்கம் யாழ் அகத்தியன் பல சிரமங்களுக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு நிலா குடும்பம் சார்பாக நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு பேட்டிக்குள் நுழைகின்றோம்.
வணக்கம் அகத்தியன்,
01.
காண்டீபன் என்னும் பெயரை மாற்றி "யாழ் அகத்தியன்" என பெயர் இட்டமைக்கான சிறப்புக்காரணங்கள் ஏதாவது உள்ளனவா?
**வணக்கம் நிலா உறவுகளே...என்னையும் ஒரு கவிஞனாக மதித்து கேள்வி கேட்டமைக்கு எனது முதல் நன்றிகள்.
"காண்டீபன்" என்பது எனது சொந்தப் பெயர் எனக்கு நானே வைத்துக் கொண்ட பெயர்தான் "யாழ் அகத்தியன்""யாழ் அகத்தியன்" என்ற பெயரை எனக்கு வைத்துக் கொள்ளக் காரணம் அதிகமானவர்களுக்கு இல்லாத பெயராக இருக்கவேண்டும் அழகான பெயராகவும் இருக்க வேண்டும் எனக்கு பிடித்த பெயராக இருக்கவேண்டும் மற்றும் எனக்கு மட்டும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் "யாழ் அகத்தியன்" என்ற பெயரை எனக்கு வைத்துக் கொண்டேன்.
02.
நீங்கள் பிறந்த திகதி என்ன?
பிறந்த திகதி: 30.04.1982
03.
நீங்கள் பிறந்த ஊர் ஏது?
**பிறந்த ஊர்**: யாழ் மாவட்டத்தில் உள்ள தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு.
04.
தமீழிழத்தில் உங்களை மிகவும் கவர்ந்தது என்ன?
தமிழிழத்தில் என்னைக் கவராதது என்று எதுவுமில்லை.பல இருக்கிறது அதில் ஒன்றுதான் சூரியக்கதிர் நடவடிக்கையால் லச்சக்கணக்கான மக்களோடு ஒரே இரவில் நானும் யாழ்ப்பாணத்தைவிட்டு இடம்பெயர்ந்த சம்பவம். சொந்த நாட்டைவிட்டு வந்தாலும் சொந்த நாட்டுக்காக பிரான்சில் வசித்து வருகிறேன்.
05.
புலம்பெயர்ந்த நாட்டில் உங்களுக்கு மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்கின்றதா? அதையிட்டு எங்கள் உறவுகளுக்கு கூறமுடியுமா?
நான் புலம்பெயர்ந்து வசிக்கும் நாடான பிரான்சிலும் எனக்கு நிறைய மறக்கமுடியாத சம்பவங்கள் நடந்திருக்கிறது அதில் சிலநான் கவி எழுத ஆரம்பித்தது, தமிழ் தொலைக்காட்சியொன்றில் நடித்து, தமிழ் வானொலியொன்றில் அறிவிப்பாளனானது.....
06.
காதலை பற்றி எல்லாரும் என்னவோ கதைக்கீனம்(என்னை தவிர)காதலை பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன? காதல் பற்றி ஒரு விமர்சனம் கேட்டால் உங்கள் பதில் எது?
காதல் என்பது ஒரு வார்த்தைதான் ஆனால் அதை யாராலும் மொழிபெயர்த்திட முடியாத படிக்க வேண்டிய மிக அற்புதமான மிக உன்னதமான மிகப் புனிதமான காவியம் அது.
காதலைக் கற்றுக் கொள்ள முடியும் விளங்கப்படுத்த முடியாது.காதல் கவிஞர்களை உருவாக்கிறது. கவிஞர்கள் காதலர்களை உருவாக்கிறார்கள்.வாழும் உலகில் வாழ்வதற்கான புது உலகம் வேண்டுமா..?
காதலிக்க ஆரம்பியுங்கள்.உலகத்தைவிட்டு தள்ளி வைத்தாலும் உயிர் உள்ளவரை உங்களோடு வரும் காதல். காதலிக்கிறர்கள் என்பதற்காக காதலித்துப் பார்க்காதீர்கள் காதலை சுவாசித்துப் பாருங்கள்
உயிரின் உன்னதம் புரியும்.
காதலை நீங்கள் தண்டித்தாலும் தண்டித்த உங்களுக்காக பாவ மன்னிப்பு கேட்கும் காதல்.காதலால் இறந்தவர்கள் இருக்கலாம் காதல் இல்லாமல் வாழ்பவர்கள் இல்லை. யார் காதலுக்காக அர்ச்சனை செய்கிறாரோ அவரே கடவுளை வணங்குகிறார்.
எதையும் எழுதிவிட முடியும் எதனாலும் காதலைப் போல் எழுதிக் கொண்டிருக்க முடியாது.
காதலை மறந்துவிட்டேன் என சொல்பவர்களே ஒருமுறை எதை மறந்தீர்கள் என்று கூறுங்கள்..?
நீங்கள் எதையெல்லாம் மறக்கவில்லை என்று நான் கூறுவேன்.
நான் காதலுக்காக வாதாட வரவில்லை காதலை எதிர்பவர்களோடு போராடவந்திருக்கிறேன். எனவே காதலியுங்கள் காதலித்துக் கொண்டே இருங்கள்.
காதலைப் பாடுங்கள்
காதலை எழுதுங்கள்
காதலைப் போற்றுங்கள்
காதலைப் பின்பற்றுங்கள்
காதலோடு வாழுங்கள்.
07.
வாழ்கையை நீங்கள் எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்?
வாழ்க்கை என்பது எனக்கு பாடப்புத்தகம். தினமும் பலவற்றை கற்றுத் தருகிறது கசப்பானவற்றையும் ஆர்வத்தோடு படிக்கும் மாணவன் நான் அதனால் வாழ்க்கை என்னை வெறுத்தாலும் வாழ்க்கையை நான் வெறுப்பதில்லை. கடவுளால் கொடுக்கப் பட்ட வாழ்க்கை என்று எப்போதும்எண்ணுவதால் ஏன் இந்த வாழ்க்கை என்று எண்ணுவதில்லை.
08.
இதுவரை சாதித்தது என்ன? இனியும் சாதிக்க போவது என்ன?
இதுவரை எதுவும் சாதித்ததில்லை ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதே சாதிக்க நினைப்பது.
09.
தெய்வ நம்பிக்கை இருக்கிறதா?
என்னை விட தெய்வம் என்னை நம்புகிறது என்பதை நம்பும் அளவுக்கு தெய்வ நம்பிக்கை இருக்கிறது.
10.
உங்கள் முன் கடவுள் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டா நீங்கள் என்ன கேட்பீங்க?அதற்கான காரணம் என்ன?
தெய்வம் தோன்றினால்... யாருக்கும் தொந்தரவு இல்லாத மரணம் வேண்டும் எனக் கேட்பேன். என் மரணம் கூட யாரையும் தொந்தரவு பண்ணக் கூடாது என்பதுதான் காரணம்.
11.
நீங்கள் கவிதை எழுதக் காரணம் என்ன?
கவிதை எழுதக் காதல்தான் காரணம் ஆமாம் கவிதை மேல் காதல்.
12.
நீங்கள் எழுதிய முதல் கவிதை எது?
முதல் கவிதை இதுவென்றுதான் நினைகிறேன்...
"கரைந்த துளியை
தேடும் புல்(ப்) போல்
தேடுகிறேன் உனை..நீ
வேரோடு கலந்ததை
மறந்து.
"-யாழ்_அகத்தியன்''
13.
உங்கள் அதிகமான கவிதையில் சோகம் தெரிகிறதே ஏன்?அதிகமாக உங்கள் கவிதைகளைப் படிக்கும்போது அனுபவிச்சு எழுதியது போல் தெரிகிறதே உண்மையா?
ரோஐ பூவை பற்றி கவிதை எழுத வேண்டும் என்றால் அதனை சுற்றி இருக்கும் முட்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைபவன் நான். அதை சோகம் என்று எடுத்துக் கொள்ளக் கூடது.
கவிதை தான் கற்பனை என்று காட்டிக் கொடுத்தால் அந்த கவிதைக்கு அழகிருக்காது.
"உனக்குள் நான்
எனக்குள் நீ
நமக்குள் நாம்
சொல்லும் கவிதை
நட்பு
"-யாழ்_அகத்தியன்.
14.
உங்களைக் கவர்ந்த உங்கள் கவிதை இல்லாத கவிதை எது?
என்னைக் கவர்ந்த கவிதை...
"எனக்குச் சம்மதமே
நீ
மாலையாய் இருப்பின்
அதில் நான்
மலராய் இருக்க மட்டுமல்ல
நீ
பாலையாய் இருப்பின்
அதில் நான்
மணலாய்க் கிடக்கவும்"
15.
உங்களுக்கு பிடித்த: படம், பாடல், கவிஞர், பாடகர், பாடகி, புத்தகம்??
பிடித்த கவிஞர்: கவிப்பேரரசு வைரமுத்து.
பிடித்த படம்: வசந்தமாளிகை
பிடித்த பாடல்: நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்...
பிடித்த கவிஞர்: கவியரசு கண்ணதாசன்
பிடித்த பாடகர்: பாலசுபிரமணியம்
பிடித்த பாடகி: ஜானகி
பிடித்த புத்தகம்: அர்த்தமுள்ள இந்துமதம்